×

கூத்தாநல்லூர் அய்யம்பேட்டை அதிவீரராமனாற்று பாலத்தில் வளர்ந்த செடிகள் அகற்றம் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கூத்தாநல்லூர், மே 1: கூத்தாநல்லூர் அருகே உள்ள அய்யம்பேட்டை கிராமத்தில் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் பாலத்தின் மீது வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டு பாலம் சுத்தப்படுத்தப்பட்டது. கூத்தாநல்லூர் - கம்மங்குடி பிரதான சாலையில் அய்யம்பேட்டையில் இரண்டு கிராமங்களையும் பிரிக்கும் வகையில் அதிவீரராமனாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே 1974ம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.சுப்பையா தலைமையில் திமுக அமைச்சர் மன்னை நாராயணசாமியால் பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 2005ம் ஆண்டு முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் முதல் தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. மக்களின் போக்குவரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் இந்த பாலம் போதுமான பராமரிப்பு இன்றி பாலத்தில் செடிகள் வேர்விட்டு வளர்ந்து மரங்கள் ஆகும் நிலையில் இருப்பது குறித்து கடந்த 20ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் பாலத்தை ஆய்வு செய்தனர். மேலும் சாலைப்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பாலத்தில் வளர்ந்திருந்த அத்தனை பெரிய செடிகளும் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதைக்கண்ட அந்தப்பகுதி மக்கள் இது குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்தனர். மேலும் இனி தொடர்ந்து இந்த பாலத்தை சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து கவனித்து,  இனியும் செடிகொடிகள் வளராத வகையில் பாலத்தை பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டு கொண்டனர்.

Tags : Koothanallur Ayyampettai Aruppiramanaruana Bridge ,plants ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்