×

யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், சக்கரி

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் மற்றும் ஸ்வரெவ், மகளிர் ஒற்றையர் பிரிவில் சக்கரி மற்றும் ராடுகனு ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று காலை நடந்த யு.எஸ்.ஓபன் காலிறுதிப் போட்டியில் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னன் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், இத்தாலியின் இளம் நட்சத்திரம் மேட்டியோ பெரட்டினியும் மோதினர். பெரட்டினி தரவரிசையில் 8ம் இடத்தில் உள்ளார். இந்த காலண்டர் வருடத்தில் 3 கிராண்ட்ஸ்லாம்களிலும் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றி, 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றும் நோக்குடன் ஜோகோவிச் ஆடி வருகிறார். இந்த யு.எஸ்.ஓபனில் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய வீரர்களிடம் கூட வழக்கமாக முதல் செட்டை பறி கொடுத்து வருகிறார். இன்றும் பெரட்டினி 7-5 என முதல் செட்டை கைப்பற்றி மிரட்டினார். ஆனால் 2வது செட்டில் ஜோகோவிச்சின் ஆதிக்கம் துவங்கியது. அடுத்தடுத்து 2 செட்களை ஜோகோவிச் 6-2, 6-2 என கைப்பற்றினார். தொடர்ந்து 4வது செட்டையும் 6-3 என கைப்பற்றி, வெற்றிகரமாக ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ்வுடன், தென்னாப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸ் மோதினார். ஏடிபி தரவரிசையில் ஸ்வரெவ் 4ம் இடத்திலும், ஹாரிஸ் 46ம் இடத்திலும் உள்ளனர். இப்போட்டியில் முதல் செட்டில் மட்டும் ஹாரிஸ் சற்று கடுமையாக போராடினார். இருப்பினும் டைபிரேக்கரில் அந்த செட்டை அவர் பறிகொடுத்தார். 2வது மற்றும் 3வது செட்களில் ஹாரிசின் சர்வீஸ்களே, போதிய வேகத்தில் விழவில்லை. இதனால் ஸ்வரெவ், மிக எளிதாக ஹாரிசின் கேம்களை பிரேக் செய்தார். இறுதியில் இப்போட்டியில் ஸ்வரெவ் 7-6, 6-3, 6-4 என நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த காலிறுதிப் போட்டியில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரியும் மோதினர். டபிள்யூ.டி.ஏ தரவரிசையில் தற்போது 4ம் இடத்தில் உள்ள பிளிஸ்கோவாவை, 17ம் இடத்தில் உள்ள சக்கரி 6-4, 6-4 என நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, முதன் முதலாக யு.எஸ்.ஓபன் மகளிர் ஒற்றையரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். முன்னதாக நடந்த மற்றொரு காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் எம்மா ராடுகனுவை எதிர்த்து, ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் மோதினார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் பென்கிக் 11ம் இடத்திலும், ராடுகனு 150வது இடத்திலும் உள்ளனர். இருப்பினும் 18 வயதேயான ராடுகனு, எதிர்கால டென்னிசில் தனக்கு முக்கியமான இடம் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6-3, 6-4 என நேர் செட்களில் பென்கிக்கை வீழ்த்தி, முதன் முதலாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு தகுதி பெற்று, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்….

The post யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச், சக்கரி appeared first on Dinakaran.

Tags : U. S.S. Open Grandslam Tennis ,Djokovich ,Zachary ,New York ,U. S.S. ,Svarev ,Open Grandslam ,Dinakaran ,
× RELATED பாரிபா ஓபன் டென்னிஸ்: பைனலில் இகா – சாக்கரி