தரமணியில் கஞ்சா விற்ற திரிபுரா வாலிபர்கள் 6 பேருக்கு சிறை : நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப். 30: தரமணி கம்பர் தெரு, பெரியார் நகர் அருகே சில வாலிபர்கள் கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று ரகசிய சோதனை நடத்தினர். அப்போது, வாலிபர்கள் சிலர் கஞ்சா வைத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக போலீசார் அவர்களை பிடித்தபோது, மஞ்சள் நிற பையில் கஞ்சாவை விற்பனை செய்ய, சிறு சிறு பொட்டலங்களாக கட்டி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை கைப்பற்றி போலீசார் சோதனை மேற்கொண்டதில் 10.10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, திரிபுராவை சேர்ந்த ஜமீன் உசைன் (28), நூர் ஆலம் மியா (30), சாதிக் மியா (30) அஜித்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, சென்னை போதைப்பொருள் தடுப்பு, மனநல பாதிப்பு பொருட்களுக்கான தடுப்பு நீதிமன்றதில் நீதிபதி சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதல் 3 குற்றவாளிகளுக்கு 4 மாத சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் அபராதமும், 4வது குற்றவாளி அஜித்குமாருக்கு 34 நாள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதேபோல் தரமணியில் கஞ்சா விற்றதாக மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட திரிபுரா  வாலிபர்கள் ஹரி ஓம் ராய், பிரதீப் தீப் நாத் ஆகியோருக்கும் 4 மாதம் சிறை, தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Tripura ,Kanja ,
× RELATED அசாம் மற்றும் திரிபுராவில்...