×

வியாபாரிகள், நிர்வாகிகள் இடையே பிரச்னை கூத்தாநல்லூர் மார்க்கெட் காலவரையின்றி மூடல்

கூத்தாநல்லூர், ஏப்.30: கூத்தாநல்லூர் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் , மார்க்கெட் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னையில் நேற்று முதல் மார்க்கெட் காலவரையின்றி மூடப்படுவதாக மார்க்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூத்தாநல்லூர் பாய்க்கார பாலம் அருகே அமைந்திருக்கும் மீன் மற்றும் இறைச்சி சென்ட்ரல் மார்க்கெட் பிரச்னை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் மார்க்கெட்டில் பெண் ஆடுகள் மற்றும் இறந்த ஆடுகளின் இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து  பிரச்னை நகராட்சி நிர்வாகம் வரை சென்று மார்க்கெட் நிர்வாகிகளான புதிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மார்க்கெட் இறைச்சி விற்பனையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சு வார்த்தையில் பங்கேற்ற சுகாதார ஆய்வாளரிடம் மார்க்கெட் நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக இறைச்சி விற்பனை செய்த வியபாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரது உரிமத்தை தற்காலிக தடைசெய்ய கேட்டுக்கொண்டது. அதற்கு நகராட்சி சார்பில் நகராட்சி சுகாதாரத்துறையில் மருத்துவ அதிகாரி இல்லாததால் எங்களால் நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று கூறிவிட்டார். பல ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் கால்நடை மருத்துவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற பேச்சு வர்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மார்க்கெட் நிர்வாகத்தின் சார்பில் சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எல்லா இறைச்சி கடைகளையும் மறு அறிவிப்பு வரும்வரை மூடுவதாக அறிவிப்பு ஒட்டப்பட்டது. ஆனால் மார்க்கெட் பகுதியில் இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளோ தங்கள் கடைகளை மூடி அதில் மார்க்கெட் நிர்வாகம் அதிக வாடகை கேட்பதாக குறிப்பிட்டு கடையை மூடுவதாக ஒரு அறிவிப்பை பதிலுக்கு ஒட்டியிருக்கிறார்கள்.

இதுகுறித்து நகராட்சி சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் பேசியபோது , எங்களுடைய வாடகையை இரண்டு மடங்கும், மேலும் ஆடு அறுக்கும் கட்டணத்தையும் அதிகப்படுத்தி உள்ளனர். இந்த கட்டண உயர்வை இந்த வருமானத்தில் எங்களால் செலுத்த முடியவில்லை, மேலும் இந்த மார்க்கெட்டை சுத்தப்படுத்தியும் தருவதில்லை.  பல இடங்களில் பெண் ஆடுகளின் இறைச்சியை விற்பனைசெய்ய அனுமதி இருக்கிறது. அதில்தான் எங்களுக்கு வருமானம். ஆனால் எங்களுக்கு அது மறுக்கப்படுகிறது. நாங்கள் பழைய வாடகையையும், ஆடுகள் அறுக்கும் பழைய கட்டணத்தையும் தர தயாராக இருக்கிறோம் . வியாரிகளின் நலன் கருதி மார்க்கெட்டை திறந்து விட நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்தார்கள்.

மார்க்கெட் நிர்வாகமான பெரியபள்ளி ஜமாத் செயலாளர்  ஷேக்அப்துல் காதர்  இதுகுறித்து பேசியபோது, பலமுறை வியாரிகளிடம் ஹலாலான இறைச்சியை மட்டுமே  விற்பனை செய்யவேண்டும் என்கிற கோரிக்கையையும், பெண் ஆடுகளை இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடாது என்றும், இறைச்சி விற்பனையில்  நேர்மையான வியாபாரத்தை கடைபிடிக்கவும் பல முறை கேட்டுக்கொள்ளப்பட்டு , பேச்சு வர்த்தையின்போது அவர்கள் அதை ஒப்புக்கொண்டு  எழுதிக்கொடுத்தும் சென்றிருக்கிறார்கள். ஆனால் அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் நடந்துகொள்வதில்லை. கடை நடத்துவதற்கான வாடகையையும் அவர்கள் ஆண்டுக்கணக்கில் தருவதில்லை. அதனால் நிர்வாகம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மார்க்கெட்டைமூடிவைக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்  என்றார்.
ரம்ஜான்பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இறைச்சியின் வியாபாரம் சற்று அதிகமாகி இருக்கும். எனவே நிர்வாகமும் வியாபாரிகளும் பேசி முடித்து நல்லதொரு தீர்வை தந்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

Tags : Closure ,executives ,merchants ,
× RELATED மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 16ம் தேதி நடக்கிறது