×

வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஜூலையில் ஆதி அத்திவரதர் சேவை உற்சவம்

காஞ்சிபுரம், ஏப்.26: காஞ்சிபுரம் வதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆதிஅத்திவரதர் சேவை உற்சவம், வரும் ஜூலையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப் புகழ் பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில். பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது. இந்த கோயில் மூலவர் பெருமாளை, 3 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். முற்காலத்தில் இந்த கோயிலில் மூலவராக இருந்த, ஆதி அத்தி வரதர், கோயில் வளாத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்தில், தண்ணீருக்கு அடியில் எழுந்தருளி உள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் விசேஷம் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1939, 1979 ஆண்டுகளில் தண்ணீரில் இருந்து வெளியே வந்து அருள்பாலித்த ஆதி அத்தி வரதர், இந்த ஆண்டு ஜூலை மாதம் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
அனந்த சரஸ் குளத்தில் தண்ணீருக்கு அடியில் உள்ள ஆதி அத்தி வரதர் சிலை மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என பக்தர்களால் கூறப்படுகிறது. பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால், சிறிது பின்னப்பட்டுவிட்டதால், அசரீரி மூலம் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் இருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறியதால், ஆதி அத்தி வரதரை அப்படியே வெள்ளி தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து அனந்த சரஸ் குளத்தில் உள்ள ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

பின்னர் பழைய சீவர பெருமாளை வரதராஜ பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். அனந்த சரஸ் குளத்தில் தண்ணீர் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அனந்த சரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மேலே வந்து, 24 நாட்கள் சயன கோலத்திலும் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மிகவும் விமரிசையாக நடைபெறும் இந்த உற்சவத்தை காண தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் இந்த விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக கடந்த 22ம் தேதி கலெக்டர் பொன்னையா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருமாளிடம் திருக்கச்சி நம்பி சுவாமிகள் நேரடியாக பேசும் பேறுபெற்றவர் என கூறப்படுகிறது. மேலும் காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேட்டில் உள்ள சாலை கிணற்றில் இருந்து தினமும் பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வந்து, சேவை செய்து வந்த உடையவர் ராமானுஜர், பெருமாள் உத்தரவின்படி ஸ்ரீரங்கம் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலில் அனந்தசரஸ், பொற்றாமரை என, இரு திருக்குளங்கள் உள்ளன. தற்போது இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் வரதராஜப்பெருமாள், தேவராஜ சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

Tags : Adoor Adutharar Service ,Varadharaja Perumal ,
× RELATED வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர்...