பந்தலூர், ஏப்.26 :பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி, கோரஞ்சால், பாலவாடி, கண்ணம்பள்ளி பகுதிகளில் சில நாட்களாக யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் பயிர்களை சேதம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைகள் கூட்டம் சுங்கம், சேரம்பாடி டவுன், நெல்லிக்குன்னு, சந்தனமாகுன்னு, திருவள்ளுவர் நகர், கோரஞ்சால், சப்பந்தோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதால், இப்பகுதி மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்பதால் யானை நடமாட்டம் குறித்து தெரியவந்தால் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
