×

ஆனைமலையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பொள்ளாச்சி, ஏப்.26: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் சம்பாரக  நெல் அறுவடை நடக்கிறது. இதனால், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.  பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில், தென்னை மற்றும் மானாவாரி சாகுபடி அதிகமாக இருந்தாலும், ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டாரத்தில்,  பல ஏக்கரில்  நெல் சாகுபடி தொடர்ந்துள்ளது. ஆண்டிற்கு இரண்டு முறை சாகுபடி செய்யும் நெல், குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்பட்டு வெளி மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். இருப்பினும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற வேதனை ஏற்படுத்தியுள்ளது.   ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரியில் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியில் இரண்டாம் போக சம்பா ரக நெல் சாகுபடி துவங்கியது. அவை, கடந்த மாதத்தில் நல்ல விளைச்சலடைந்து அறுவடைக்கு தயாரானது.

 பின், கடந்த இரண்டு வாரத்திற்கு முன் விளைச்சலடைந்த நெல்லை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் இறங்கினர்.  இந்த நிலையில், ஆனைமலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி, நெல்லுக்குண்டான உரிய விலை நிர்ணயித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என, பல விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து, விவசாயிகள் கோரிக்கை ஏற்று ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே, நேற்று முன்தினம் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகள் கொண்டுவந்த சன்ன ரகம் நெல் ஒரு குவின்டால் ரூ.1840க்கும், புதுரகம் ரூ.1800க்கும் கொள்முதல் செய்யப்பட்டன.ஒவ்வொரு நாளும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்குண்டான விலையானது, குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags : Opening ,Paddy Purchase Center ,Anamalai ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு