×

கோதையாறு நீர் மின் நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை காதலியை திருமணம் செய்வது பிடிக்காமல் விபரீதம்

குலசேகரம், ஏப்.25 : கோதையாறு நீர் மின் நிலைய பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள நடைக்காவு பாறையடி பகுதியை சேர்ந்தவர் அஜின்ராஜ் (26). இவர் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9 வது பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். தற்போது குமரி மாவட்டம் கோதையாறு நீர் மின் நிலையத்தில் அஜின்ராஜிற்கு, பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் குமரி - நெல்லை பகுதியையொட்டி அமைந்துள்ள கோதையாறு நீர் மின் நிலையத்தின் பாதுகாப்பு பணி சில ஆண்டுகளுக்கு முன் தான் மணிமுத்தாறு பட்டாலியன் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நீர் மின் நிலையத்தில் போலீசார் தங்குவதற்கான அறையும் உள்ளது. நேற்று காலை 8 மணியில் இருந்து அஜின்ராஜ் பாதுகாப்பு பணியை தொடங்க வேண்டும். ஆனால் அவர் நேற்று முன் தினம் இரவே, கோதையாறு வந்து விட்டார். அங்கு காவல்துறையினர் தங்கும் அறையில் தங்கினார். நேற்று காலை 8 மணியளவில் சக போலீஸ்காரரிடம் இருந்து பாதுகாப்பு பணிக்கான துப்பாக்கியை பெற்றார். பின்னர் தனது அறைக்குள் அந்த துப்பாக்கியை கொண்டு சென்றார். திடீரென அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் சென்று பார்த்த போது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, அஜின்ராஜ் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், இது குறித்து மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கும், பேச்சிப்பாறை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பேச்சிப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மணிமுத்தாறு பட்டாலியன் பிரிவு துணை ஆணையர் முருகேசன் தலைமையில் பட்டாலியன் பிரிவு போலீஸ் அதிகாரிகளும் கோதையாறு வந்தனர். அஜின்ராஜ் உறவினர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அஜின்ராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர். அஜின்ராஜ், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அவரது செல்போனில் இருந்து கடைசியாக பேசப்பட்ட அழைப்புகளையும் சோதனை செய்தனர். இதில் அஜின்ராஜிக்கும், அவரது கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இரு வீட்டாரும் பேசி திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள் இடையே திடீரென கசப்புணர்வு ஏற்பட்டு, அஜின்ராஜ் திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. எனவே காதலி தரப்பில் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

6 மாதங்களில் திருமணம் செய்வேன் என அஜின்ராஜ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதன்படி திருமணம் நடக்க வில்லை. இதனால் மனம் உடைந்த  அவரது காதலி, கடந்த சில நாட்களுக்கு முன் குழித்துறை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு போலீசார் அஜின்ராஜை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் 24ம்தேதி (நேற்று) அஜின்ராஜிற்கும், அவரது காதலிக்கும் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதை கூறி அஜின்ராஜ் விடுமுறையும் எடுத்துள்ளார். ஆனால் திடீரென உறவினர்களிடம் எதுவும் கூறாமல் நேற்று முன் தினமே பணி செய்யும் இடத்துக்கு சென்று தற்கொலை செய்து இருக்கிறார். காதலியை திருமணம் செய்வது பிடிக்காமல், அஜின்ராஜ் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உதவி கலெக்டர் விசாரணை  பணியில் இருக்கும் போது அஜின்ராஜ் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும். அதன்படி பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அறி நேற்று மதியம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை  மேற்கொண்டார். பின்னர் அஜின்ராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கியில் இருந்து கைரேகைகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags : police officer ,Kothaiyaru Water Power Station ,suicide ,
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...