×

ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்; கர்நாடக போலீஸ் அதிகாரி, 2 காவலர்கள் பரிதாப பலி

சேலம்: தமிழ்நாட்டில் வருகிற 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாநிங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பட்டாலியன் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 31ம் தேதி 8 கம்பெனி போலீசார் சேலம் சரகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இந்த கம்பெனிக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்தியன் ரிசர்வ் பட்டாலியனை சேர்ந்த துணை கமாண்டன்ட் ஹேமந்த்குமார் தலைவராக இருந்தார். இந்த 8 பட்டாலியன் போலீசாரில் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் ஒரு பட்டாலியனும், மேட்டூரில் ஒரு பட்டாலியனும் பிரித்து அனுப்பப்பட்டனர். அதே போல நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியிலும் பட்டாலியன் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் தர்மபுரியில் நிறுத்தப்பட்டுள்ள பட்டாலியனுக்கு கர்நாடக மாநில ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பிரபாகரா(55) என்பவர் இருந்தார். சேலத்தில் தங்கியிருந்த ஹேமந்த்குமாருக்கு விட்டல் (35) என்பவர் கன்மேனாக இருந்தார்.

ஹேமந்த்குமாருக்கு தமிழ் தெரியாததால், சேலம் மல்லூரைச்சேர்ந்த போலீஸ்காரர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று ஹேமந்த்குமார், தர்மபுரியில் உள்ள பட்டாலியனை ஆய்வு செய்ய சென்றார். அவரது காரை சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் தினேஷ் (29) என்பவர் ஓட்டினார். இந்த காரில், ஹேமந்த்குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர். இவர்களின் எல்லையில் இருந்து வெளி இடங்களுக்கு செல்லவேண்டுமானால் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். ஆனால் இவர்கள் யாரிடமும் சொல்லாமல் காஞ்சிபுரத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். பின்னர் சேலம் புறப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பைபாஸ் சாலையில் வந்து, வளைவில் திரும்ப முயன்றபோது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதிய ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது.

இந்த விபத்தில் உதவி கமாண்டன்ட் பிரபாகரா, டிரைவர் தினேஷ், கன்மேன் விட்டல்(35) ஆகியோர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஹேமந்த்குமார், ஜெயக்குமார் ஆகியோரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்; கர்நாடக போலீஸ் அதிகாரி, 2 காவலர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : JEEP- GOVERNMENT ,KARNATAKA POLICE OFFICER ,Salem ,Tamil Nadu ,19th parliamentary election ,Karnataka State ,Salem Warehouse ,Jeep ,Karnataka ,Officer ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...