×

சேத்தியாத்தோப்பு அருகே வாலாஜா ஏரியை பாதுகாக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, ஏப். 25: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாலாஜா ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு, பின்னலூர், கரைமேடு ஆகிய கிராமங்களுக்கு அருகில் அமைந்துள்ளது வாலாஜா ஏரி. இந்த ஏரி சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் அதிகபட்சமாக 12 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். ஏரி மூலம் சுற்றுப்புற 30 கிராமத்திற்குமேல் நிலத்தடி நீர் பாதுகாப்பு, குடிநீர், விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது. இந்த ஏரி வீராணம் ஏரியின் இணைப்பாகவும், நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுக்கும் போது வெளியேறும் உபரிநீரை சேமித்து வைக்கும் ஏரியாகவும் இருக்கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வாலாஜா ஏரியை பாதுகாத்து பராமரிக்க இப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பியிருக்கும் ஏரிகளில் இதுவும் ஒன்று.

ஆனால் தற்போது ஏரி, அதன் அடையாளத்தை இழந்து வருகிறது. ஏரியில் தேவையற்ற கோரைகள், கருவேல மரங்கள், மண் திட்டுக்கள் உருவாகி தூர்ந்து போய் இருக்கிறது. இதனால் தண்ணீர் தேக்கும் கொள்ளளவு குறைந்துபோய் விட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஏரி வறண்டு இப்பகுதியில் விவசாயம், குடிநீர் தேவைக்கு பெரும் சிரமம் ஏற்படும். கரைகளில் கருவேல மரங்களும், புதர்கள் மண்டி ஏரிக்கு செல்லும் சாலை மறைந்து விட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது.எனவே இந்த ஏரியை பராமரித்து அதிகளவு தண்ணீர் தேக்குவதற்கும், ஏரி பகுதியில் உள்ளதேவையற்ற மரங்களை அகற்றி, சாலையை சீரமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,Sethiyatope ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!