×

அரிமளம் சிவன் கோயில் பஸ்ஸ்டாப்பில் துருப்பிடித்து சேதமடைந்த பேருந்து கால அட்டவணையை மாற்றாத அவலம் பயணிகள் அவதி

திருமயம், ஏப். 25:அரிமளம் சிவன் கோயில் பஸ்ஸ்டாப்பில் துருப்பிடித்து சேதமடைந்த பேருந்து கால அட்டவணையை புதிதாக மாற்றாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியாகவும், ஒன்றியமாகவும் உள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரிமளம் ஒரு முக்கிய வணிக வளாகமாகவும், போக்குவரத்து வசதி வழங்கும் ஊராகவும் உள்ளது. எனவே அரிமளத்துக்கு ராயவரம், புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பேருந்துகள்
இயக்கப்படுகிறது.  

இந்நிலையில் அரிமளத்தில் இருந்து வெளியூர்களுக்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் வரும் காலத்தை கணக்கிடும் வகையில் 5 ஆண்டுக்கு முன்னர் அரிமளத்தின் முக்கிய பஸ்ஸ்டாப்பான சிவன் கோயில் பஸ் ஸ்டாப்பில் பேருந்து கால அட்டவணை அடங்கிய தகவல் பலகை பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டது. அதைதொடர்ந்து தகவல் பலகை சரியாக பராமரிக்காததால் பலகை துருப்படித்து சேதமடைந்துள்ளது. மேலும் பஸ் தடம் எண்கள், அரிமளம் பஸ் ஸ்டாப்புக்கு பஸ் வரும் நேரம் முற்றிலும் அழிந்துள்ளதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரிமளம் பகுதி பயணிகளின் நலன்கருதி பஸ்ஸ்டாப்பில் துருபிடித்து காணப்படும் பேருந்து கால அட்டவணை பலகையை அகற்றி விட்டு புதிய பலகை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Passenger ,Arimala Shiva Temple Bus Stand ,
× RELATED 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு...