×

டிஏபி கரைசலை தயாரிப்பதில் கூடுதல் கவனம் தேவை வேளாண் உதவி இயக்குனர் தகவல்

ராஜபாளையம், ஏப். 25: பயறு வகைகளுக்கு டிஏபி கரைசலை தயாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தாமல் விட்டால் பயிர்கள் காய்ந்து விடும் என ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடையில் நெல்லுக்குப்பின் உளுந்து, தட்டைப்பயிறு, அவரை, பாசிப்பயறு, கொள்ளு, துவரை, சோயா, மொச்சை, ஆகிய பயறு சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இவற்றில் பூ பூக்கும் தருணத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளித்து அதிக மகசூல் பெறலாம். டிஏபி கரைசல் தயாரிப்பதில் அளவு மாறினால் பயன் கிடைக்காது. அளவு கூடினால் பயிர்கள் காய்ந்து விடும். எனவே கரைசல் தயாரிப்பில் சரியான வழி முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். அதன்படி 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் இரவில் கரைத்து 4 முறை இந்தக் கரைசலை நன்கு கலக்க வேண்டும். காலையில் கரைசலை கலக்காமல் மேல்புறம் தெளிந்திருப்பதை துணியால் வடிகட்டி எடுத்து இந்தக் கரைசலுடன் 190 லிட்டர் தண்ணீரை கலந்து ஒரு ஏக்கர் செடிக்கு தெளிக்கலாம்.

விசை தெளிப்பானில் கரைசல் முழுமையாக வெளியேறாமல் நுரையே அதிகமாக வரும். எனவே கைத்தெளிப்பான் பறயன்படுத்தியே தெளிக்க வேண்டும். வெயில் நேரத்தில் தெளித்தால் பயனில்லை. காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் செடி முழுவதும் நனையும் வகையில் தெளிக்க வேண்டும். பயறு வகைகளை நடவு செய்த 30வது நாளில் ஒரு முறையும் 45வது நாளில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இல்லையெனில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 15 நாள் இடைவெளி விட்டு மறுமுறையும் தெளிக்கலாம். இதனால் பொக்குகாய்கள் வராது. பூக்கள் கொட்டாது. காய்கள் நன்கு திரட்சியாக வளர்வதுடன் கூடுதல் மகசூல் பெறலாம். சாதரணமாக ஒரு ஹெக்டரில் 620 கிலோ பயறு வகைகள் கிடைத்தால் 2 சதம் டிஏபி தெளிப்பதன் மூலம் கூடுதலாக 20 சதம் வரை மகசூல் கிடைக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை