×

நரிக்குடி-பார்த்திபனூர் இடையே இரவு நேர பஸ் இயக்க கோரிக்கை

திருச்சுழி, ஏப். 25: பார்த்திபனூரிலிருந்து நரிக்குடிக்கு இரவு நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நரிக்குடி மற்றும் மறையூர், மாயலேரி, புத்தனேந்தல், டி.வேலாங்குடி, ஆண்டியேந்தல், எஸ்.வல்லக்குளம், சேதுராயனேந்தல் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பல்வேறு வேலை நிமத்தமாக, தேவைகளுக்காக மக்கள் பார்த்திபனூர் செல்கின்றனர். அங்கிருந்து மதுரை, மானாமதுரை, சிவங்ககை, பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் வேலை முடிந்து இரவில் வீடு திரும்ப பெரிதும் சிரமப்படுகின்றனர்.

பார்த்திபனூரிலிருந்து நரிக்குடிக்கு வர பஸ் இல்லை. அரசு பஸ் மாலை 6 மணிக்கு மேலும் தனியார் பஸ் இரவு 8 மணிக்கு மேலும் இல்லை. அதன்பிறகு பார்த்திபனூர் வருபவர்கள் நரிக்குடி மற்றும் இதர ஊர்களுக்கு செல்ல அதிகக் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் வர வேண்டியுள்ளது. வசதி இல்லாதவர்கள் இரவு பார்த்திபனூரிலேயே தங்கி காலையில் ஊர் வந்து சேர்கின்றனர். இரவு 10 மணி வரையாவது பார்த்திபனூரிலிருந்து நரிக்குடி அரசு பஸ் இயக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Narikudi-Parthibanur ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே புதர்மண்டி...