×

சூளகிரி அருகே பரிதாபம் லாரிகள் மோதியதில் பெண் பலி

சூளகிரி, ஏப்.23: சூளகிரி அருகே நேற்று அதிகாலை, முன்னால் சென்ற லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில், பெண் பலியானார். மேலும், டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கு பழங்களை ஏற்றி வருவதற்காக, நேற்று முன்தினம் இரவு  மினி லாரி ஒன்று சென்றது. லாரியை விழுப்புரத்தை சேர்ந்த ஏழுமலையான்(22) என்பவர் ஓட்டிச்சென்றார்.  அவருடன் பழனிவேல்(45) அவரது மனைவி வள்ளி(38), வீரமணி(30), செல்வராஜ்(40), ரமேஷ்(27), சதீஷ்(31),  விக்னேஷ்(42) மற்றும் தமிழ்செல்வன்(33) ஆகிய தொழிலாளர்கள் லாரியில் சென்றனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெங்களூரு தேசிய  நெஞ்சாலையில், பவர்கிரிட் எதிரே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய மினி லாரி, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில்  இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கிய பழனிவேலுவின் மனைவி வள்ளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், லாரி டிரைவர் ஏழுமலையான் உள்பட 8 பேர்  படுகாயம் அடைந்ததனர். இதனிடையே, விபத்தை கண்டதும் முன்னால் சென்ற லாரி டிரைவர், அங்கு நிற்காமல் லாரியை ஓட்டிச் சென்று விட்டார். சம்பவ இடத்துக்கு வந்த சூளகிரி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் இறந்த வள்ளியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், நிற்காமல் சென்ற லாரி குறித்து விசாரித்து வருகிறார்.

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே மேலுமலை முதல் கோபசந்திரம் வரை அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இங்கு விபத்துகளை தடுக்க, சாலையில் கேமரா பொருத்தி கண்காணித்தும், பயனில்லை. இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை, மலைச்சரிவை போல அமைந்துள்ளது. விதிமுறை மீறி லோடு ஏற்றி வரும் வாகனங்கள், இந்த சரிவில் டீசலை மிச்சப்படுத்த நியூட்ரல் கியரில் வாகனத்தை இயக்குகின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையில்  கிரஷர் மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து விழும் மணலால், சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விபத்துக்களை குறைக்கு முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : victims ,blast ,Sulagiri ,
× RELATED அரியலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி