×

தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? Postal Regn No. MA /03/2018 - 2020 ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே பஸ் திருச்சுழி அருகே கிராம மக்கள் அவதி

திருச்சுழி, ஏப். 23: திருச்சுழி அருகே, ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே பஸ் இயக்கப்படுவதால் கிராம மக்களும், மாணவ, மாணவியரும் அவதிப்படுகின்றனர்.திருச்சுழி அருகே கொட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 150க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். மேலும், கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.இந்நிலையில், போதிய பஸ் வசதியில்லாமல், பொதுமக்களும், விவசாயக் கூலித்தொழிலாளர்களும், மாணவ, மாணவியரும் அவதிப்படுகின்றனர்.காலையில் காரியாபட்டியிலிருந்து கொட்டம் அருகேயுள்ள புலிகுறிச்சி வரை ஒரு அரசு பஸ்சும், மாலை 4.30 மணிக்கு திருச்சுழியிலிருந்து புலிக்குறிச்சி வழியாக காரியாபட்டிக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் வரும்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் பாறைக்குளம், கொட்டம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களும், மாணவ, மாணவியரும் பஸ் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது மாணவ, மாணவியருக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இந்நிலையில், பஸ் வசதி இல்லாததால், சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 3 கி.மீ. குறுக்கு வழியாக கண்மாய்க்குள் நடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.எனவே, அடுத்த கல்வி ஆண்டு பள்ளி தொடங்குவதற்குள் மாணவ, மாணவியரும், பொதுமக்களும், கூலித்தொழிலாளர்களும் பயன்படும் வகையில் கொட்டம் கிராமத்தின் வழியாக அதிக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து கொட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘காலையில் எங்கள் கிராமத்திற்கு அருகேயுள்ள புலிக்குறிச்சிக்கு 8.30 மணியளவில் ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை மாணவ, மாணவியர் தவறவிட்டால் எங்கள் கிராமத்திலிருந்து திருச்சுழிக்கு வழியாக 3 கி.மீ. தூரம் நடந்து கண்மாய் பகுதி வழியாக பள்ளிக்குச் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் கண்மாயில் நீர்தேங்கியிருந்ததால் சுமார் 8 கி.மீ.,சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாணவ, மாணவியர், கூலித்தொழிலாளர்கள் நலன் கருதி கொட்டம் கிராமம் வழியாக அதிக பஸ்களை இயக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED பட்டாசு மூலப்பொருள் 14 மூட்டை பறிமுதல்: 2 பேர் கைது