×

பரமக்குடியில் இருந்து காரைக்குடிக்கு முத்தூர் வழியாக கூடுதல் அரசுபஸ் இயக்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்

இளையான்குடி, ஏப்.23: பரமக்குடியிலிருந்து முத்தூர் வழியாக காரைக்குடிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியிலிருந்து இளையான்குடி, சாலைக்கிராமம், முத்தூர், அளவிடங்கான், விசவனூர் ஆனந்தூர் வழியாக காரைக்குடிக்கு பல ஆண்டுகளாக காலை 8.30 மணி, மாலை 4 மணி என இரண்டு அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் விவசாயிகள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லுரி மாணவ, மாணவிகள் அதிகம் பேர் பயணம் செய்வதால் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இளைஞர்கள், மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிகொண்டும் பஸ் கூரை மீது ஏறியும் பயணம் செய்கின்றனர். இதனால் பளு தாங்காமல் சாய்ந்த நிலையிலேயே பஸ் செல்கிறது. மேலும் திருவிழா காலங்களில் இந்த வழியில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சிற்காக பல மணிநேரம் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. கூட்டம் அதிகமான சமயங்களில் விபத்து ஏற்பட்டு உயிர் பலி நேரிடும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு பரமக்குடியிலிருந்து முத்தூர் வழியாக கூடுதல் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாடக்கோட்டை தாஸ் கூறுகையில், ‘‘கிராமப்புறம் வழியாக செல்லும் இந்த அரசு பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். உடைமைகளை தவறவிடவும் நேரிடுகிறது. பல வருடமாக யாரும் இதை கண்டுகொள்வதில்லை. பயணிகளின் நலன் கருதி, இளையான்குடி, சாலைக்கிராமம், வண்டல், அளவிடங்கான், ஆனந்தூர் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துக் கழகமும் முன் வர வேண்டும்’’ என்றார்.

Tags : council ,Paramakudi ,Karaikudi ,Muthur ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...