×

அருப்புக்கோட்டை ரோட்டில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மரக்கடைகள் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர், ஏப். 22: விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை ரோட்டில், ரயில்வே மேம்பால தரைப்பகுதியில் ஆக்கிரமித்து மரக்கடைகளை வைத்துள்ளனர். இதில், தீ விபத்து ஏற்பட்டால், பாலத்தின் உறுதித்தன்மைக்கு ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரில் உள்ள அருப்புக்கோட்டை ரோடு ரயில்வே மேம்பாலம் கடந்த 2003ல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 24 மணி நேரமும் கனரக வாகனங்கள், பஸ்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் பாலத்தில் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் கீழ், இருபுறமும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு மரக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பழைய கட்டிடங்களின் ஜன்னல், கதவு, நிலைகள் வியாபாரமும், புதிய மரங்களால் செய்யப்பட்ட நிலை, கதவு, ஜன்னல்கள் மற்றும் மரச்சாமன்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த மரக்கடைகளும் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற வகையில் இருக்கின்றன. மேலும் பாலத்தின் அடியில் சமூகவிரோத செயல்கள் இரவு நேரங்களில் நடைபெறுகின்றன. சமூக விரோதிகள் மரக்கடைகளுக்கு தீ வைத்தால் பாலத்தின் அடியில் குவிந்து கிடக்கும் மரங்கள் எரிந்து, பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும். அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘அருப்புக்கோட்டை ரோடு ரயில்வே மேம்பால தரைப்பகுதியை ஆக்கிரமித்து மரக்கடைகள் வைத்துள்ளனர். இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. போட்டியால் கடைகளுக்கு தீ வைத்து ஆபத்து ஏற்பட்டால் மேம்பாலத்தின் உறுதித்தன்மை கடும் பாதிப்பிற்கு உள்ளாகும். ஆபத்து ஏற்படும் முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாலத்தின் தரைப்பகுதியை பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை விருதுநகர் கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி கூறுகையில், ‘பாலத்தின் பராமரிப்பு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாலத்தின் தரைப்பகுதி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் ரயில்வே மேம்பால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நகராட்சியுடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்’ என்றார்.

Tags : Aruppukottai road ,
× RELATED சேதமடைந்த அருப்புக்கோட்டை ரோடு