×

பணம் பட்டுவாடா செய்தவர்கள் வாக்காளரை தேடி பரிதவிப்பு

மதுரை, ஏப். 19: தேரோட்டம், அழகர் எதிர்சேவையால் மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நீடித்தும் வாக்குப்திவு சரிந்துள்ளது. பல பூத்கள் வெறிச்சோடி அலுவலர்கள் தூங்கி வழிந்தனர். பணம் பட்டுவாடா செய்தவர்கள் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு வாக்காளரை தேடி பரிதவித்தனர். தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக மதுரை சித்திரை திருவிழாவின் உச்சகட்டமான தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை நடைபெற்ற முக்கிய நாளான நேற்று, தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திருவிழா நாளில் தேர்தல் வாக்குபதிவு சாத்தியமாகாது, என்று எதிர்ப்பு குரல் எழுப்பி மன்றாடியும் தேர்தல் ஆணையம் மசியவில்லை. அதற்கு பதிலாக மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டது.  திருவிழாவோடு தேர்தல் வாக்குப்பதிவும் நடந்ததின் காரணமாக வாக்காளர் நேற்று பெரும் இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. ஒரே நாளில் தேரோட்டம், எதிர்சேவையால் தென் மாவட்டம் முழுவதும் இருந்து மதுரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. இதில் டூவீலர்கள் கூட நுழைய முடியவில்லை. இதனால் இந்த பகுதிகளில் இருந்த 159 வாக்குச்சாவடிகளுக்கு பல மணி நேரம் வாக்காளர் செல்ல முடியவில்லை. இதனால் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிய வீதிகளில் அமைந்திருந்து வாக்குச்சாவடி, எதிர்சேவை நடைபெற்ற அழகர்கோவில் சாலை, தல்லாகுளம் பகுதிகளில் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளரே இல்லாமல் அடிக்கடி வெறிச்சோடியது.  இதனால் அங்கு வாக்குப்பதிவு மந்தநிலையே நிலவியது.

 வாக்குப்பதிவு சதவீதம் சரிந்துள்ளது. முந்திய தேர்தல்களில் 65 சதவீதத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. 2009 மக்களவை தேர்தலில் 74 சதவீதமும், 2014ல் 67.77 சதவீதமும் வாக்குப்பதிவானது. திருவிழா நாளில் தேர்தலை திணி்த்துவிட்டு, 100 சதவீத வாக்கு பதிவுக்கு மதுரை கலெக்டர் நடராஜன் விழிப்புணர்வு ஊர்வலம் பிரசாரம் நடத்தி “முதலில் ஜனநாயக கடமையாக வாக்களித்துவிட்டு, திருவிழாவுக்கு செல்லுங்கள்” என்றார். மேலும் “வாக்குப்பதிவு சதவீதம் குறைய கூடாது” என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். ஆனால் வாக்குப்பதிவு எண்ணிக்கை குறைந்தது கண்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இதை சவாலாக ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட மதுரை கலெக்டர் கலக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி முழுவதும் 1,549 வாக்குச்சாவடிகளிலும் இரவு 8 மணி வாக்குப்பதிவு நீடித்தும் எதிர்பார்த்த பயன் அளிக்கவில்லை. மாலை 6 மணிக்கு பிறகு இருட்டில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்கு பெண் வாக்காளர் வருகை குறைந்த அளவிலேயே இருந்துள்ளது. கிராம பகுதிகளில் அதுவும் இல்லை. இதனால் பல  வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள்  தூங்கிவழிந்தனர்.ஓட்டுக்கு ஒரு வேட்பாளர் ரூ.300 வீதம் பணம் பட்டுவாடா செய்த முக்கிய வேட்பாளரின் கட்சியினர் பட்டியலை கையில் வைத்து கொண்டு, தேடியபோது 40 சதவீதம் பேரை காணவில்லை. அவர்கள் குடும்பத்தோடு திருவிழாவுக்கு சென்றுவிட்டனர். செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவிப்பதை காண முடிந்தது. உதாரணமாக பழங்காநத்தத்தில் பணம் பட்டுவாடா செய்த ஒருவர் 400 பேரின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு “மதியம் 3 மணி வரை 160 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 240 பேரை திருவிழா கூட்டத்தில் எங்கே தேடுவேன்” என்றார்.

Tags : voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...