×

திருப்புவனம் பகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

திருப்புவனம், ஏப். 19: திருப்புவனம் பகுதியில் அமைதியாக வாக்குப் பதிவு நடந்தது.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பிஜேபி சார்பில் எச்.ராஜாவும், அமமுக சார்பில் தேர்போகி பாண்டியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகனும், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யபிரியா உட்பட 27 பேர் போட்டியிடுகின்றனர். மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் காசிலிங்கம் என்ற இலக்கியதாசனும், அதிமுக சார்பில் நெட்டூர் நாகராஜனும், அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடியும், நாம் தமிழர்கட்சி சார்பில் சண்முகப்பிரியா உட்பட 14 பேர் போட்டியிடுகின்றனர். மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, மூன்று ஒன்றியங்களில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 63 ஆயிரத்து 454 வாக்குகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 975 பெண் வாக்காளர்களும் உள்ளனர். திருப்புவனம் தாலுகாவில் மட்டும் மொத்த வாக்காளர்கள் 91 ஆயிரத்து 157 பேர் உள்ளனர். மொத்தம் உள்ள 114 வாக்கு சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மானாமதுரை சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி எண் 1 செம்பூர் ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், தட்டான்குளம் வாக்குசாவடி எண் 37 ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் ஒருமணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது. திருப்புவனம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள எண் 19 வாக்குச்சாவடியில் அதிகாரிகள் கட்சி ஏஜண்டுகள் வர தாமதமானதால் 30 நிமிடம் தாமதமாக வாக்குப் பதிவு துவங்கயது. மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் 63.89 சதவீதம் வாக்குகள் பதிவானது. சிவகங்கை நாடாளுமன்றத்திற்கு 64.50 சதவீதம் வாக்குகள் பதிவானது.

Tags : area ,Tiruppannam ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது