×

வழக்கத்திற்கு மாறாக வெளுத்து வாங்கும் வெயில் புதுகை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேட்டரி கார் வசதி தாகத்தை போக்க 2000 லிட்டர் குடிநீர் தொட்டி

புதுக்கோட்டை, ஏப்.18: புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் சிரமத்தை போக்க பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2000 லிட்டர் குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து தினமும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் உள்நோயாளியாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை பார்க்க அவர்களின் உறவினர்கள் தினசரி வந்து செல்கின்றனர். இதனால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் காலை முதல் மாலை வரை மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போது இல்லாத அளவிற்கு கத்தரி வெயில் துவங்கும் முன் வெயில் வெழுத்து வாங்கி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு  வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களின் வசதிக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக 2000 லிட்டர் குடிதண்ணீர் வசதி அந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்நோயாளிகள் பிரிவு வரை நோயாளிகளும், நடக்க இயலாதவர்களும் செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதை  நேற்று ஆய்வு செய்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: கடும் வெயிலினால் மக்களும் நோயாளிகளும் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்நிலையில் தற்போது  நிழற்குடை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சியின் துணையோடு 4 தண்ணீர் தொட்டியில் 2000 லிட்டர் குடிதண்ணீர் நிரப்பும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோடைகால வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பேருந்து நிறுத்தத்திலிருந்து உள்நோயாளி பிரிவு வரை செல்வதற்காக இலவச பேட்டரி கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் உள்நோயாளி பிரிவிற்கு எதிரிலும் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின்போது நிலைய மருத்துவர் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவர் இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags : Wiley Government Hospital ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...