×

மகாவீர் ஜெயந்தி தினத்தில் கறிகோழி வியாபாரம் படுஜோர் அதிகாரிகள் விரைந்ததால் கடைகள் பூட்டப்பட்டது

கரூர், ஏப். 18: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கரூர் வெங்கமேடு பகுதியில் செயல்பட்டு வந்த பிராய்லர் கடைகளை உடனடியாக பூட்ட வேண்டும் என நகர்நல அலுவலர் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் வெங்கமேடு, தாந்தோணிமலை, ராயனூர், தொழிற்பேட்டை, பசுபதிபாளையம், காந்திகிராமம், வடிவேல் நகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பிராய்லர் கடைகள் உள்ளன. விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பிராய்லர் மற்றும் மட்டன் கடைகளை பூட்ட வேண்டும் என நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை கடை கடையாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நகராட்சி நகர்நல அலுவலர் பிரியா மற்றும் அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் வெங்கமேடு கடைவீதி வழியாக சென்ற போது, பெரும்பாலான மட்டன் மற்றும் பிராய்லர் கடைகள் திறந்து வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தன. இதனை பார்த்த, நகர்நல அலுவலர், காலையில் வந்து நோட்டீஸ் தந்தும், கடை பூட்டப்படாமல் உள்ளது. இன்று ஒரு நாளாவது கடையை பூட்டக்கூடாதா? என கேள்வி கேட்டதோடு, உடனடியாக கடையை பூட்ட வேண்டும் என வலியுறுத்தி சென்றார். இதனால், இந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது. நகர்நல அலுவலரின் இந்த நடவடிக்கை காரணமாக வெங்கமேடு பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், தாந்தோணிமலை, தொழிற்பேட்டை, ராயனூர் போன்ற பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான கடைகள் நேற்று காலை முதல் திறந்தே இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள கடையை பூட்ட வேண்டும் என முன் அறிவிப்பு எதுவும் வழங்கவில்லை எனவும் கடை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது, ஒட்டுமொத்தமாக நகராட்சி முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Shops ,rush ,Mahaveer Jayanti ,
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை