×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வெங்காயத்துக்கு போதிய விலை இல்லை: கண்ணீர் விடும் விவசாயிகள்

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரஸ்தா, மானூர் சுற்றுவட்டார பகுதிகள், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, சங்கரன்கோவில், புளியங்குடி, தூத்துக்குடி குளத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது சின்னவெங்காயம் 60 ரூபாய்க்கு மேல் சில்லறை விலைக்கு விற்கப்பட்டது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக தென் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தது.இதன் மூலம் விவசாய பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டது. இதனால் சின்ன வெங்காயம், பல்லாரி உள்ளிட்ட விவசாய விளை பொருள்களை மிகுந்த ஆர்வத்துடன் விவசாயிகள் பயிர் செய்தனர். தற்போது வெங்காயம் விளைச்சல் அதிகரித்து அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வெங்காயத்தின் விலை அதிகளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. சின்ன வெங்காயம் சமீபத்தில் 3 கிலோ ரூ.100 சில்லறை விலைக்கு விற்று வந்த நிலையில் மேலும் விலை குறைந்து 4 கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை வீழ்ச்சி குறித்து நெல்லையில் ரஸ்தா அருகே சின்ன வெங்காயம் பயிர் செய்துள்ள விவசாயி கோமுதுரையிடம் கேட்டபோது, ”ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்துள்ளேன்.70 முதல் 85 நாட்களில் சின்ன வெங்காயத்தை பயிர் செய்து அறுவடை செய்யலாம். தற்போது சின்ன வெங்காயம் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் விலை அதிகளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் எங்களிடம் இருந்து ரூ.50 வரை வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது 15 முதல் 20 ரூபாய்க்கே வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். வெங்காய விதை, உரம், மருந்து, களைபறிப்பு, அறுவடை ஆள்கூலி, வாகன வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளைச் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இங்கு விளைந்துள்ள சின்னவெங்காயத்தை அறுவடை செய்தால் 5 ஆயிரம் கிலோ வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதை அதிகபட்சம் கிலோ 20 ரூபாய்க்கு கொடுத்தால் 1 லட்ச ரூபாய் கிடைக்கும். இப்படி மாதக்கணக்கில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்த என்னைப் போன்ற விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அறுவடை செய்யாமல் வயிலிலேயே போட்டுள்ளோம். சின்னவெங்காயத்தை உலர்த்தி பாதுகாப்பாக வைப்பதற்கும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்தார்….

The post நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வெங்காயத்துக்கு போதிய விலை இல்லை: கண்ணீர் விடும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tenkasi ,Tuticorin ,Thenkasi ,Thoothukudi ,Rasta ,Manur ,Alankulam ,Bhavoorchatram ,Surandai ,Sankarankovil ,Puliangudi ,Dinakaran ,
× RELATED பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்