×

செய்யாறு, ஆரணி, கலசபாக்கத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது

கலசபாக்கம், ஏப்.18: செய்யாறு, ஆரணி, கலசபாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதையொட்டி நேற்று வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது.கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் 1,13,999 ஆண் வாக்காளர்களும், 1,16,495 பெண் வாக்காளர்களும், 10 மற்றவை என மொத்தம் 2,30,504 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்று மாலை பணிநியமன ஆணை வழங்கப்பட்டு, பஸ்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்நிலையில், நேற்று கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பரிமளா, தாசில்தார் லலிதா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.ஆரணி: ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 7,14,410 ஆண் வாக்காளர்களும், 7,31,293 பெண் வாக்காளர்களும், மற்றவை 78 என மொத்தம் 14,45,781 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.
ஆரணி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,756 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.அதேபோல் ஆரணி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆரணி மக்களவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் ஆர்டிஓ மைதிலி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் இப்பணி நடந்தது.

அப்போது, ஆர்டிஓ மைதிலி மற்றும் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வதற்கு முன் விநாயகர் கோயிலில் பூஜை செய்து தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என பூஜை செய்து வழிபட்டனர்.செய்யாறு: செய்யாறு தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களுக்கும் தாலுகா அலுவலகத்தில் பூஜை செய்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணி ஆர்டிஓ ஆர்.அன்னம்மாள், ஆர்டிஓ நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமி, தாசில்தார் மூர்த்தி, தேர்தல் துணை தாசில்தார்கள் சுகுமார், உதயகுமார், கண்காணிப்பாளர் கோபால் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

Tags : police stations ,polling stations ,Arani ,
× RELATED மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால்...