×

மஞ்சூரில் ஒரே நேரத்தில் பிரசாரம் திமுக, அதிமுகவினர் வாக்குவாதம்

மஞ்சூர். ஏப்.17: மஞ்சூரில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தின் போது திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நேற்று மாலை 4 மணியளவில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமையில் முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ராஜூ, பேரூராட்சி அவைதலைவர் ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சின்னான் உள்ளிட்டோர் மஞ்சூர் பஜாரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். உடன் திமுக நிர்வாகிகள், இளைஞரணியினர் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட ஏராளமனோர் பங்கேற்றனர். இந்நிலையில் 5 மணியளவில் அப்பகுதியில் அதிமுகவினர் வாகன பிரசாரத்தை துவக்கினார்கள். திமுகவினர் பேசி கொண்டிருக்கும் போதே அதிமுகவினர் அத்துமீறி பிரசாரத்தில் ஈடுபட்டதால் பஜார் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினருமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற மஞ்சூர் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா தலைமையிலான போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினார். திமுக தரப்பில் தங்களிடம் இருந்த அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டபடி மாலை 5 மணி வரை பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் அதிமுகவினர் தங்களது பிரசாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதிமுகவினரிடம் இருந்த அனுமதி கடிதத்தையும் போலீசார் பார்வையிட்டனர். இதனால் திமுக, அதிமுக வினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் எதிர், எதிரே நின்று 5.30மணி வரை கோஷமிட்டபின் கலைந்து சென்றனர். திமுக, அதிமுக கூட்டணி கட்சியினர் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தங்களது இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டதால் பிரசசாரம் முடியும் வரை மஞ்சூர் பஜார் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : DMK ,Manchur ,AIADMK ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்