×

தொகுதி முன்னேற்றத்துக்கு பாகுபாடின்றி செயல்படுவேன்

நாமக்கல், ஏப்.17: நாமக்கல் தொகுதியின் முன்னேற்றத்திற்கு ஜாதி பாகுபாடு இல்லாமல் செயல்படுவேன் என்று கொமதேக வேட்பாளர் சின்ராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் சின்ராஜ் நேற்று நாமக்கல் நகரில் உள்ள 39 வார்டுகளிலும் கூட்டணி கட்சியினருடன் சென்று தீவிரமாக வாக்குசேகரித்தார். நேற்று மாலை வேட்பாளர் சின்ராஜ் தனது இறுதிகட்ட பிரசாரத்தை பூங்காரோட்டில் நிறைவு செய்தார். அப்போது நடந்து சென்று மக்களிடம் வாக்குசேகரித்தார். அவர் பேசியது: கடந்த 25 நாட்களுக்கு மேலாக தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துள்ளேன். யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சமாக பெறமாட்டேன். இந்த தொகுதி மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்.

ஜாதி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக எனது பணியை வகுத்து அதன்படி செயல்படுவேன். எனவே, எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். இவ்வாறு வேட்பாளர் சின்ராஜ் தெரிவித்தார். இறுதிகட்ட பிரசாரத்தின் போது, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத், கொங்கு வேளாளகவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன், மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், திமுக சட்டத்திட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால் மற்றும் ஏராளமான திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கோயில் பூசாரிகளுக்கு அடையாள அட்டை