×

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 187 பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு ஊழியர்கள் நியமனம்

நாமக்கல், ஏப்.12: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில், 187 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில், 187 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம், தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணி மோகன், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆசியாமரியம் தலைமையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பார்வையாளர் வாணிமோகன் பேசியதாவது: பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் பணியாளர்கள் ஆவர். வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பார்வையிட்டு, வாக்கு பதிவு இயல்பான முறையில் நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பார்கள். நுண்பார்வையாளர்கள் மாதிரி வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு முன்புறம் வாக்குச்சாவடி எண், நாடாளுமன்ற தொகுதி எண் சரியாக எழுதப்பட்டுள்ளதா, வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட வேண்டும்.

வாக்குப்பதிவின் ரகசியம், வேட்பாளர்களின் முகவர்கள் செயல்பாடு, அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா, வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்கள் மட்டும் வருகின்றனரா என்ற விபரங்களை பதிவு செய்தல் வேண்டும். வாக்குப்பதிவின் இயல்பான நிலைக்கு மாறாக ஏதேனும் மாறுதல் தென்பட்டால், அதுகுறித்து உடனடியாக பொது பார்வையாளரை, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு பொதுப்பார்வையாளர் வாணிமோகன் கூறினார். தொடர்ந்து, கலெக்டர் ஆசியாமரியம் பேசுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், 187 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என  கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வாக்குப்பதிவை கண்காணிக்க 121 நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பார்வையிடவேண்டும்,’ என்றார். கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தேசிய தகவல் மைய அலுவலர் செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தபால் வாக்கு தொடர்பு அலுவலர் முருகன் மற்றும் நுண் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : government ,constituency ,Namakkal ,
× RELATED கோணம் அரசு பொறியியல் கல்லூரியில்...