×

விவசாயி சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்த

திருவண்ணாமலை, ஏப்.12: திருவண்ணாமலை அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்த விவசாயியின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அடுத்த புதுமல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் என்ற சுரேஷ்(40), விவசாயி. இவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் காலை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது, சுரேஷ் மற்றும் கூலித்தொழிலாளர்கள் கிணற்றில் இறங்கி தூர்வாரினர். பின்னர், பணிகள் முடிந்ததும் சுரேஷ் கிணற்றில் உள்ள படிகள் வழியாக மேலே ஏறி வந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக படி உடைந்ததில், சுரேஷ் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார். இதையடுத்து, சுரேஷின் சடலத்தை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் நேற்று காலை, சுரேஷின் வீட்டிற்கு சென்று பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல சடலத்தை ஒப்படைக்குமாறு தெரிவித்தனர். அப்போது, அவரது உறவினர்கள் சடலத்தை ஒப்படைக்க மறுத்துவிட்டனர். சுரேஷ் உயிரிழந்தது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம், முறைப்படி பிரேத பரிசோதனை செய்துதான் சடலத்தை ஒப்படைக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுரேஷின் உறவினர்கள், திருவண்ணாமலை- வேலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் விரைந்து வந்து, சமரசம் பேசினர். இதைத்தொடர்ந்து, சுரேஷின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED அக்னி வசந்த விழாவில் அர்சுனன் தபசு...