பழநி பகுதியில் பதட்டமான 16 வாக்குச்சாவடிக்கு சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு சப்கலெக்டர் தகவல்

பழநி, ஏப். 11: பழநி பகுதியில் பதட்டமான 16 வாக்குச்சாவடிகளுக்கு சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக சப்கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார். தமிழகத்தில்  39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பழநி  மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 16 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக  கண்டறியப்பட்டுள்ளன. இவைகளுக்கு சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட  உள்ளது. இதுகுறித்து பழநி சார் ஆட்சியர் அருண்ராஜ் கூறியதாவது,  ‘தேர்தலை அமைதியாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சப்படாமல் இருக்கவும்  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி கடந்த தேர்தல்  காலங்களில் நடந்த வன்முறைகள், தகராறுகள் ஆகியவற்றை கணக்கிட்டு அவற்றின்  அடிப்படையில் பழநி பகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள்  கண்டறியப்பட்டுள்ளன. இதன்படி பழநி அருகே பச்சளநாயக்கன்பட்டி,  சிவகிரிப்பட்டி, பாப்பம்பட்டி, பெரியகலையம்புத்தூர், ஆயக்குடி,  ஐய்யம்புள்ளி, வரதமாநதி, பாலசமுத்திரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள 16  வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு மத்திய ரிசர்வ்  போலீஸ் படையினர் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. தவிர, சட்டம் ஒழங்கு போலீசாரும் கூடுதலான அளவில்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க  உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றனர்.

Tags :
× RELATED ஒரே வாரத்தில் நிலக்கடலை கிலோவுக்கு ரூ.16 குறைவு