×

சொக்கனூர் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்

கெங்கவல்லி, ஏப்.11: சொக்கானூர் கிராம மக்களின் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நேற்று திடீரென வாபஸ் பெறப்பட்டது.
கெங்கவல்லி தாலுகா வீரகனூர் பேரூராட்சி 14வது வார்டு சொக்கனூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.  இப்பகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், கிராமத்தின் மையப்பகுதியில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். மறுநாள் வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி, சொக்கானூர் கிராமத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களின் கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பேரூராட்சி சார்பில் கிராமத்தில் நேற்று பிளாஸ்டிக் டேங்க்  அமைத்து குடிநீரும் வினியோகித்தனர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் 3வது நாளான நேற்று, சொக்கானூர் கிராம மக்கள் தங்களின் தேர்தல் புணக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அறிவித்தனர். இதனிடையே, சொக்கானூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர், தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி விட்டது. சேலம் மாவட்டம் முதல்வரின் கோட்டை என்பதால், ஓட்டுக்கு ₹2 ஆயிரம் கொடுக்க உள்ளார்கள். நீங்கள் தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால்,  உங்களுக்கு ஓட்டுக்கான தொகை கிடைக்காது என்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டனர் என கூறப்படுகிறது.

Tags : village ,Sokkanoor ,election ,
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!