×

கடையம் அருகே கரடிகள் நடமாட்டம்

கடையம், ஏப். 10:  கடையம் அருகே குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். நெல்லை மாவட்டம், கடையம்  அருகே துப்பாக்குடி, மயிலப்பப்புரம் உள்ளிட்ட  கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி  அருகே அடைச்சாணி பொத்தை பகுதியில் வசித்து வந்த கரடிகள், தற்போது கொளுத்தி வரும் வெயிலால் தண்ணீர் மற்றும் இரைதேடி அருகேயுள்ள கிராமங்களுக்குள் அதாவது குடியிருப்பு பகுதிகளுக்குள் சுதந்திரமாக உலா வருகின்றன. கரடிகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 இதுகுறித்து மயிலப்பபுரத்தை சேர்ந்த தொழிலாளி  பூசன பெருமாள் கூறுகையில், ‘‘பொத்தைபகுதியில் வசித்து வந்த இரு  கரடிகள் தற்போது  ஊருக்குள் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. விளங்காடு,  மலையன்குளம் பகுதியில் ஜோடியாக வலம் வருகின்றன. ஆறு, வயக்காட்டிற்கு  செல்லும் மக்கள் பீதியில் உள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்  பகலில் கூட வீட்டைவிட்டு வெளியில்  வர அஞ்சுகின்றனர்’’ என்றார்.  இதனிடையே தோப்பு பகுதியில் புகுந்த கரடிகள் வாழைகளை  சேதபடுத்தி வருகின்றன. அத்துடன் முருங்கை மரங்களையும் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு  வருகின்றன.


Tags :
× RELATED அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு