மேலூர், ஏப்.9: கடந்த 2 வருடமாக பூட்டியே கிடக்கும் நூலகத்தால் கிராமத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலூர் அருகில் உள்ள கீழவளவில் வீரகாளியம்மன் கோயில் முன்புறம் அமைதியான சூழலில் நூலகம் கட்டப்பட்டது. கீழவளவு ஊராட்சிக்குட்பட்ட கீழவளவு, அம்மன்கோவில்பட்டி, அடைஞ்சான்கோவில்பட்டி, சர்க்கரைபீர் மலைப்பட்டி பகுதி மட்டுமல்லாது அருகில் உள்ள சருகுவலைபட்டி, வடக்கு வலையபட்டியை சேர்ந்தவர்களும் இந்த நூலகத்திற்கு வருவது வழக்கம். இந்த நூலகத்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் வாழமலை நூலகராக இருந்து வந்தார்.
இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு இறந்து போனார். அப்போது பூட்டப்பட்ட நூலகம் இது வரை திறக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடாக வேறு நூலகர் இங்கு நியமிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நூலகம் மூடியே கிடப்பதால் பகலில் இந்த இடம் படுத்து தூங்கும் இடமாக மாறி உள்ளது. மாலை வேளையில் குடிமகன்களின் பாராக மாறிவிடுகிறது. தினசரி நூலகத்தின் வாசலில் ஏராளமான மதுபாட்டில்கள் கிடப்பதே அதற்கு சாட்சி. உடனடியாக மூடிக்கிடக்கும் இந்த நூலகத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், ‘‘கீழவளவில் கட்டப்பட்ட நூலகத்தால் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் பெரிதும் பயன்பெற்று வந்தனர். ஆனால் நூலகர் இறந்தபிறகு கடந்த 2 வருடங்களாக நூலகம் பூட்டி கிடக்கிறது. இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மாணவர்களுக்கு வாழ்வளித்து வந்த இந்த நூலகத்தை உடனே திறக்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.