×

சொந்த கட்டிடம் இல்லை, காலியிடங்களை நிரப்பவில்ைல நூலகத்துறையில் நிலவும் நிர்வாக சீர்கேடு

காரைக்குடி, மே 28: நூலகத்துறையில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நூலகர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் 4532 நூலகங்கள் உள்ளன. இதில் மாநில நூலகம் 2, மாவட்ட மைய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1925, ஊர்புற நூலகங்கள் 1821, பகுதி நேர நூலகங்கள் 742 ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. கல்வித்துறையின் கீழ் இந்த நூலகங்கள் செயல்படுகின்றன. இதற்கு என அரசு திட்ட ஒதுக்கீடு கிடையாது.

வீட்டு வரியின் மூலம் 10 சதவீதம் சேர்த்து வசூல் செய்யப்படும் நூலக வரி மூலம் நிர்வாகம் செயல்படுகிறது. அரசு திட்ட ஒதுக்கீடு இல்லாததால் நூலக ஆணைக்குழு விதிப்படி நிதி அந்தந்த மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட நூலக அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் முறையான பணிகள் நடப்பது கிடையாது. 80 சதவீத நூலகங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்படுகின்றன. கழிப்பிட வசதியின்றி பல நூலகங்கள் உள்ளன. ஆனால் தேவைக்கு அதிகமான நூல்கள் கொள்முதல் செய்து வழங்கப்படுகின்றன.
 
இவை பயனற்று வைக்க இடமின்றி கட்டிப்போட்டு பயனற்ற நிலையில் உள்ளன. நாளிதழ்கள், பருவ இதழ்கள் வாங்க ஆண்டுக்கு சுமார் ரூ.28 கோடி ஒதுக்கப்படுகிறது. வாசகர்களை கேட்டுதான் பத்திரிகை வாங்க வேண்டும் என இயக்குநர் உத்தரவு. ஆனால் கமிஷனுக்காக அஞ்சல் வழி மூலம் தேவையற்ற பல இதழ்கள் வாங்கி பயனற்று கிடக்கிறது. நிரந்தர நூலகர் பணியிடங்கள் நியமனம் இல்லை. பல நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு மேலாக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. ஊர்ப்புற நூலகர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சிறப்பு கால முறை ஊதியம் வழங்கப்படுகிறது.

இதனால் அரசு பிடித்தம் இல்லாததால் பணியின் போது பணப்பலன் இன்றி அவர்களின் குடும்பம் தவிக்கும் நிலை உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளனர். நிரந்தர இயக்குநர் இல்லாதது, நிரந்தர மாவட்ட நூலக அலுவலர் நியமனம் இல்லாத நிலை என்பதால் நிர்வாகச் சீர்கேடு நடக்கிறது என நூலகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : building ,library library ,
× RELATED சிலந்தியாற்றில் கட்டப்படுவது...