×

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டை , ஏப்.9: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 24ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. 31ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும்முத்துமாரியம்மன் அன்னம், ரிஷப, குதிரை, சிம்மம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், பாரி வேட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்களை அணிந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக அன்னவாசல், கீரனூர், நார்த்தாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்து வந்தும், அலகுகுத்தி கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல குழந்தைகளை கரும்பால் தொட்டில் கட்டி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் மாலை சுமார் 3.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரிம்மனை எழுந்தருள செய்தனர். பின்னர் திரளான பக்தர்கள்  வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Muthuramaniyan ,Nartamalai ,
× RELATED உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி...