×

எந்த வசதியுமே செய்யாமல் புறக்கணித்துள்ளனர் அத்திப்பட்டியாக மாறிய தரமணி கல்லுக்குட்டை: அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா உருக்கம்

சென்னை: தென்சென்னை தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வார்டு வாரியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று மயிலாப்பூர்  பகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். தென்சென்னை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் வேளச்சேரி சரவணன் மற்றும் நிர்வாகிகள் அவருடன் சென்று பரிசு பெட்டகம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்.  பிரசாரத்தின்போது இசக்கி சுப்பையா பேசியதாவது:தென்சென்னை தொகுதியை நாட்டின் முன்னோடி தொகுதியாக மாற்றுவதற்கு பல திட்டங்களை பட்டியல் போட்டு வைத்துள்ளேன். தரமணி அடுத்த கல்லுக்குட்டை என்ற பகுதிக்குள் பிரசாரத்துக்கு சென்றேன்.

எந்த  வேட்பாளர்களும் அந்த பகுதிக்குள் வாக்கு கேட்டு சென்றிருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு அந்த பகுதி மிகவும் மோசமாக, அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு பகுதியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி  அடைந்தேன். சாலைகள், தெருவிளக்குகள், மின்சாரம் என எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் தமிழக அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது.ஆனால் கல்லுக்குட்டை பகுதியை சுற்றி ஐடி நிறுவன கட்டிடங்கள் வானளாவிய அளவுக்கு வெளிநாட்டு பிரமிப்பை உண்டு பண்ணும் வகையில் உள்ளன. அஜீத் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டியை போன்று வரைபடத்தில்  இல்லாமல் போகும் அளவுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியாக உள்ளது. எனக்கு அங்கீகாரம் கொடுத்தால் இப்பகுதிக்கான அடிப்படை வசதிகளை செய்து அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு நகரப்பகுதியாக மாற்றி காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Thamamani Kallkupattu ,candidate ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்