×

13,953 வாக்குசாவடி அலுவலர்களுக்கு தபால் ஓட்டு வழங்காமல் கலெக்டர் ‘கல்தா’ * ஒரு சதவீதம் பேருக்கு மட்டும் தபால் ஓட்டு விநியோகம்

மதுரை, ஏப். 8:    தேர்தல் பணியில் ஈடுபடும் 13,953 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அரசுக்கு எதிராக ஓட்டு விழும் என்பதால், தபால் ஓட்டுகளை வழங்க கலெக்டர் மறுப்பதாக அரசு ஊழியர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 2,755 வாக்குச்சாவடிகள் உள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 ஊழியர்கள் வீதமும், கூடுதலாக 20 சதவீதம் பணி இருப்பு உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 953 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். இவர்கள் அனைவரும் கடந்தாண்டு நவம்பர் மாதம் முறையாக துறைவாரியாக தேர்வு செய்யப்பட்டு உரிய அதிகாரியின் ஒப்புதல் கடிதம் பெற்று தேர்தல் ஆணையத்திற்கு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டது.

தேர்தல் பணியில் ஈடுபடும் 13,953 வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. அப்போது, அனைவரிடத்திலும், தபால் ஓட்டு போடுவதற்கான கடிதம் பெறப்பட்டது. இதற்காக உரிய விண்ணப்பத்தை  ஊழியர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். பொதுவாக தபால் ஓட்டு கேட்டு விண்ணப்பிப்போருக்கு அவருடைய முகவரிக்கு தபால் ஓட்டு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தபால் ஓட்டை பெற்று, அவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு தனது வாக்கை பதிவு செய்து, அதனை அதற்கான பெட்டியில் போட்டுவிடுவார்கள். ஆனால் இந்தாண்டு, அதன் நடைமுறையை மாற்றி, தபால் ஓட்டுகள் இரண்டாவது பயிற்சி வகுப்பு நடைபெறும் போது அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நேற்று, வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2வது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் கலந்துகொண்ட 13,953 ஊழியர்களும் தபால் ஓட்டு கிடைக்கும் என்ற ஆவலுடன் வந்தனர். அவர்களில் ஒரு தொகுதிக்கு 10 முதல் 50 பேருக்கு மட்டுமே தபால் ஓட்டு வழங்கப்பட்டது. மீதியுள்ள பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு தபால் ஓட்டு இல்லை. இதனையறிந்த ஊழியர்கள், முறையாக நாங்கள் விண்ணப்பித்துள்ளோமே ஏன் எங்களுக்கு தபால் ஓட்டு வரவில்லை என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகாம் அதிகாரிகள் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கொடுத்தது இவ்வளவு ஓட்டுதான். அவர்கள் கொடுத்த தபால் ஓட்டை கொடுத்துவிட்டேன்,’ என கூறினார். இதனால் ஊழியர்கள் ஆத்திரமடைந்தனர்.
இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தபால் ஓட்டுக்கள் தயாரிக்கும் பணி  கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அவரிடம் ஒப்படைத்துள்ளோம். எல்லா முகாமிலும் தபால் ஒட்டு வரவில்லை என புகார் வந்து கொண்டுள்ளது. என்ன நடந்தது என தெரியவில்லை. கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்,’ என்றார்.  

இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா கூறுகையில், ‘13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட வேண்டும். ஆனால், கலெக்டர் திட்டமிட்டு ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே தபால் ஓட்டு கொடுத்துள்ளார். மீதியுள்ள 99 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டு இல்லை என தெரிகிறது. அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியதால், அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என முடிவு செய்து,  அரசின் கைப்பாவையாக மதுரை கலெக்டர் செயல்படுகிறார். தேர்தல் ஆணையம் கூறும் கருத்தை முறையாக அதிகாரிகளிடம் கூறுவது இல்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தபால் ஓட்டுகளை அரசு ஊழியர்களுக்கு கொடுக்காமல் கலெக்டர் திட்டமிட்டு மறைப்பதாக தெரிகிறது. இது கண்டிக்கதக்கது, தபால் ஓட்டுக்களை எங்களுக்கு வாங்கவில்லையென்றால் தேர்தல் பணியை புறக்கணிப்போம்’ என்றார்.

Tags : Collector ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...