×

போலி பெண் டாக்டர் கைது

திருவள்ளூர், ஏப். 8: திருவள்ளூர் அருகே கூடப்பாக்கம் கிராமத்தில், பிளஸ் 2 படித்துவிட்டு ஆங்கில முறையிலான சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் முன்னாள் ராணுவ குடியிருப்பு பகுதியில், போலி பெண் டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்துள்ளதாக, விஏஓ செல்வகுமாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கிளினிக் நடத்திவந்த வெள்ளவேடு பிரகாஷ் மனைவி அமுதா(48) என்பவரை பிடித்தனர். விசாரணையில், அவர் பிளஸ் 2 முடித்துவிட்டு, நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இம்மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், வேறு படிப்பு படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பது, டாக்டர்களிடம் உதவியாளராக இருந்து கொண்டு வீட்டில் மருத்துவம் பார்ப்பது, படிக்காமலேயே டாக்டர் என கூறி கிளினிக் நடத்தி வருவது என பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், சுகாதாரத்துறை, போலீசார் இணைந்து, மாவட்டத்தில் உள்ள போலி டாக்டர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...