×

காலிக்குடங்களுடன் சாலை மறியல்

விருதுநகர், ஏப். 7: விருதுநகரில் உள்ள பெருமாள்கோவில் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என கூறப்படுகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை அரைமணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை விருதுநகர்-சிவகாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பஜார் மற்றும் மேற்கு காவல் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, நாகரத்தினம் ஆகியோர் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு குடிநீர் வரும் பகிர்மான குழாய் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடைந்தது. இதனால், குடிநீர் வீணாகிறது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்கின்றனர். தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. குடிநீர் இணைப்பு குழாய்களை சீரமைத்து குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். நகராட்சி குழாய் பொருத்துனர்: தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மின்மோட்டார்கள் பயன்படுத்தி அதிகப்படியாக நீரை உறிஞ்சுகின்றனர். பகிர்மானக் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை பொங்கல் முடிந்ததும் சீரமைத்து, குடிநீர் விநியோகத்தை சீராக்குவோம்’ என்றார்.

Tags : Galleons ,
× RELATED முறையாக குடிநீர் வழங்க கோரி...