×

நாராயணபுரம், ராமஞ்சேரி பகுதிகளில் கிடப்பில் 2 மேம்பாலம் கட்டும் பணி: சுங்கவரி மட்டும் ஆண்டுதோறும் உயர்வு

திருவள்ளூர், ஏப். 5: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக 2 மேம்பாலங்களை கட்டி முடிக்காத நிலையில் சுங்கவரியை மட்டும் ஆண்டுதோறும் உயர்த்தி வசூலிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்த சாலையில் 100க்கும் மேற்பட்டோர் விபத்தில் பலியாகி உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கொதிப்பில் உள்ளனர். தமிழகத்தில் சென்னை முதல் திருப்பதி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. சாலையை பராமரிக்கும் தனியார் நிறுவனங்கள் 40 கி.மீ., தூரம் இடைவெளியில் ‘‘டோல்கேட்’’ அமைத்து வரி வசூல் செய்து வருகின்றன. இவ்வாறு வசூல் செய்யும் தொகையில் சாலை பராமரிப்பு மட்டுமின்றி, தேவையான இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் அமைத்தல், சாலை ஓரங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்தல் மற்றும் வாகன ஓட்டிகள் தங்குவதற்காக ஓய்வு இல்லங்கள் அமைத்து பராமரித்தல் உள்ளிட்டவைகளை இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும்போது இந்த நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியினையும் இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டும்.ஆனால் தற்போது தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து
வரும் நிறுவனம், வாகனங்களுக்கான கட்டணங்களை வசூலிப்பதில் மட்டுமே குறியாக செயல்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு குறிப்பிட்ட இடங்களில் மின் விளக்கு, கழிப்பிடங்கள் மற்றும் போதிய குடிநீர் வசதி செய்வதில்லை.குடிநீர் சப்ளை இல்லாததால் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மேலும் திருவள்ளூர் முதல் திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி வரை நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். சாலையின் இடையே மைய தடுப்புகள் இல்லாததால், வாகனங்கள் கட்டுக்கடங்காத வேகத்தில் வருவதால், விபத்துக்கு உள்ளாகின்றன.
அதோடு, சாலையோரம் இரும்பு தடுப்புகளை மீறி மரங்கள் வளர்ந்து அதன் கிளைகள் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனாலும் விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது.

சுங்கவரியை மட்டும் ஆண்டுதோறும் உயர்த்தி வசூலிக்கும் அதிகாரிகள், மனித உயிர்களுக்கு எமனாக இருக்கும் என்.எச்., ரோட்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, உரிய கவனம் செலுத்துவதோடு, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலங்களை அகலப்படுத்துவதில் ‘‘அசால்ட்’’இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இந்த நெடுஞ்சாலையில் நாராயணபுரம், பட்டறைபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலத்தில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகன போக்குவரத்து 20 நாட்களுக்கு மேல் தடைபட்டது. தற்போது அங்கு மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிகள் நிலுவையில் உள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் குறுகிய தரைப்பாலத்தில் பல்வேறு விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது. எனவே, விபத்துகளை தடுக்க அரை குறையாக நிலுவையில் உள்ள இரண்டு மேம்பால பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : areas ,Narayanapuram ,Ramancheri ,
× RELATED மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை