×

நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி விட்டு குமாரமங்கலம்- ஆதனூர் இடையே கதவணை கட்ட வேண்டும் விவசாயிகள் சங்கம் மனு

கும்பகோணம், ஏப். 4:  கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிவிட்டு அணைக்கரை குமாரமங்கலம்- ஆதனூர் இடையே கதவணை கட்டும் பணியை துவங்க வேண்டுமென விவசாயிகள் சங்கம் மனு அனுப்பியது. தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதசாகுவுக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தலைவர் விமலநாதன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கொள்ளிடத்தின் குறுக்கே அணைக்கரை அருகில் குமாரமங்கலம்- ஆதனூர் இடையே மேம்பாலத்துடன் கூடிய கதவணை ரூ.400 கோடியில் அமைப்பதாக அறிவித்தார். இதைதொடர்ந்து தற்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்தாண்டு ஆகஸ்ட் 20ம் தேதி கொள்ளிடத்தில் சென்று வீணாகும் வெள்ளநீரை சேமிக்க அணைக்கரை கிழக்கே 12வது கிலோ மீட்டரில் கதவணை கட்ட நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசி விவசாயிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் பணிகள் விரைவாக துவங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் நிலம் கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் 130 பேரிடம் இருந்து 200 ஏக்கர் நிலத்தை சட்டரீதியாக கையகப்படுத்தாமலும், ஒப்புதல் பெறாமலும் மத்திய அரசின் நியாயமான இழப்பீடு நிலம் கையகப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மறுசீரமைப்பு உரிமை சட்டம் என எந்த பிரிவையும் செயல்படுத்தாமல் இடத்தை பெற்றுள்ளனர்.

விவசாயிகளுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நியாயமான இழப்பீட்டை மறுவாழ்வு மற்றும் மாற்று நிலம் வழங்குதல் திட்டம் எதையும் அறிவிக்காமல் தேர்தலையும் வேறு சில லாபங்களை மட்டுமே கணக்கிட்டு அவசர அவசரமாக இந்த திட்ட பணிகளை கடந்த 15 தினங்களுக்கு முன் பொதுப்பணித்துறை ஒப்புதலுடன் தனியார் ஒப்பந்தகாரர் துவங்கியுள்ளார். சராசரி சிறு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களான தற்போதைய சந்தை மதிப்பில் ஏக்கருக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் மதிப்பாகும். சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் அதிகபட்ச இழப்பீடு தொகையை இந்த விவசாயிகளுக்கும் வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசும் மேற்கண்ட சட்டத்தின்படி கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட கூடுதலாக 4 மடங்கு இழப்பீடு வழங்க வழிவகை உள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் ஆர்டிஓ வீராச்சாமி கடந்த ஜனவரி 23ம் தேதி பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து உள்ள விவசாயிகளின் வழிகாட்டும் மதிப்பின்படி ஏக்கருக்கு ரூ.1.25 லட்சம் மட்டுமே வழங்க முடியுமென கூறினார். இடம் பயன்படுத்தப்படாமல் இழப்பீடு தொகையாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை அந்த விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நில விபரங்கள் எதுவும் அரசிதழ் நாளிதழில் வெளியிடப்படாமல் கட்டுமான பணிகளை துவங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே மத்திய அரசின் நியாயமான இழப்பீட்டை வழங்கி விட்டு திட்ட பணிகளை துவங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Farmers Association ,Kumaramangalam ,Adanoor ,land ,
× RELATED தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்...