×

தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளில் சிலர், அங்கிருந்த செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண் பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை அனுமதி கோரப்பட்டது. ஆனால் நேற்று ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டு இருந்த தமிழ்நாடு விவசாயிகள், அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்து இருந்தனர்.

அங்கு வந்த துணை ராணுவ அதிகாரிகள், ‘நீங்கள் போராட்டம் நடத்த நாளை (இன்று) அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை’ என்று தெரிவித்தனர். விவசாயிகள் தரப்பில் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் – விவசாயிகள் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் சில விவசாயிகள் அப்பகுதியில் இருந்த செல்போன் டவர் மீது ஏறியும் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர், மரத்தின் மீது ஏறியவர்களையும், செல்போன் டவர் மீது ஏறியவர்களையும் ராட்சத கிரேன் மூலம் கீழே இறக்கினர். இருந்தும் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

The post தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Jandar Mantar ,Delhi ,Union Govt ,New Delhi ,Tamil Nadu ,Ayyakannu ,South Indian Rivers Link Farmers Association ,
× RELATED டெல்லி ஜந்தர் மந்தரில் மரம், செல்போன்...