×

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் குடிசை வாழ் மக்களுக்கு பட்டா பெற்று தருவேன்: அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா உறுதி

சென்னை: தென்சென்னை பகுதியில் பட்டா கேட்டு போராடும் குடிசைவாசிகளுக்கு பட்டா பெற்று தருவேன் என்று இசக்கி சுப்பையா வாக்குறுதி அளித்தார். தென்சென்னை தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா பல்வேறு வாக்குறுதிகளுடன் பொதுமக்களை வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். மக்களோடு மக்களாக நின்று குறைகளை கேட்டு, அதை தீர்த்து வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று உறுதி அளித்து வருவதால் அவர் செல்லும் பகுதிகளில் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள இசக்கி சுப்பையா நேற்று சாலிகிராமம், விருகம்பாக்கம், பசவபுரம், மஜீத் நகர், பொன்னியம்மன் கோயில் உட்பட 129வது வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நடந்தே சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், பகுதி செயலாளர் பொன்னி தர்மராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் பொன் பாஸ்கர், அம்மா பேரவை பகுதி செயலாளர் குணசீலன், பகுதி துணை செயலாளர் கோகுல கிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் அவருடன் சென்று பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தின்போது இசக்கி சுப்பையா பேசியதாவது: சாலிகிராமம் பகுதி வழியாக செல்லும் கால்வாய் பராமரிக்கப்படாமல் உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக தெரிவித்தீர்கள். என்னை வெற்றி பெற செய்தால் கால்வாயையொட்டி தடுப்பு சுவர் கட்டி தருவேன். மேலும் மஜீத் நகர் பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்கு பட்டா கேட்டு பல காலமாக போராடி வருவதாக தெரிவித்தார்கள். அவர்களுக்கு பட்டா பெற்று தருவேன். தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் குடிநீர் பிரச்னை மக்களை தவிக்க வைக்கிறது. இந்த தொகுதிக்குட்பட்ட ஏரிகளில் பராமரிப்பின்றி தூர்வாராமல் கிடப்பதால் தான் நிலத்தடி நீர்மட்டம் கீழ்நோக்கி சென்றுவிட்டது. எனவே அனைத்து ஏரிகளையும் தூர்வாரி மழைநீர் சேகரிப்பு களமாக மாற்றுவேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : cottage residents ,South ,Senate ,candidate candidate ,EC ,constituency ,
× RELATED ஜார்ஜியா மாகாண செனட் சபை தேர்தல்: தமிழர் அஸ்வின் ராமசாமி போட்டி