×

நாட்றம்பள்ளி அருகே அடிப்படை வசதிகள் கோரி கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு: அமைச்சர் தொகுதியில் அவலநிலை


நாட்றம்பள்ளி, ஏப்.4: நாட்றம்பள்ளி அருகே வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள் கோரியும், அமைச்சர் தொகுதியில் இந்த அவலநிலை உள்ளதாக கூறி தேர்தல் புறக்கணிப்பதாக கருப்புகொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளதால் கூட்டுறவு நல சங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வசித்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.  ஆனாலும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமிபுரம் பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை லட்சுமிபுரம் கூட்ரோட்டில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் உமாரம்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை லட்சுமிபுரம் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பேனர் வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியதாவது: லட்சுமிபுரத்தில் வசிக்கும் 300 குடும்பத்தினருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். பகுதி நேர ரேஷன் கடை மற்றும் குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். அமைச்சர் கே.சி.வீரமணியின் தொகுதியாக இருந்தும் எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை’ என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : facilities ,Nathurampalli ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...