×

பம்பிங் குழாய் உடைப்பால் பம்பிங் நிறுத்தம் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் ‘கட்’

விருதுநகர், ஏப். 3: விருதுநகர் அருகே, ரோசல்பட்டி ஊராட்சியில் தண்ணீர் பம்பிங் நிறுத்தப்பட்டதால், 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 30 ஆயிரம் பொதுமக்கள்
தவிக்கின்றனர். விருதுநகர் அருகே, ரோசல்பட்டி ஊராட்சி உள்ளது. முதல்நிலை ஊராட்சியான இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன; 30 ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ராஜீவ்காந்தி குடிநீர் திட்டம் மூலம் சோழக்கவுண்டன்பட்டி, வள்ளிக்குளம், நாகம்பட்டி பகுதியில் போர்வெல் அமைத்து, அங்கிருந்து தண்ணீர் எடுத்து காந்திநகர், கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், ரோசல்பட்டி, குமராபுரம், ஜக்கம்மாள்புரம் ஆகிய பகுதிகளுக்கு விநியோகம் செய்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால்,  15 முதல் 20 நாள் இடைவெளியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், சிவகாசி ரோட்டில் உள்ள மத்தியசேனை கிணற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம், ரோசல்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் எடுக்கும் தண்ணீரை பாண்டியன் நகர், முத்தால் நகர், அண்ணா நகர், மல்லிக்கிட்டங்கி ஆகிய பகுதிகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்கின்றனர். ஆனால், இந்த தண்ணீர் குடிக்க உகந்ததாக இல்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக ஒரு குடம் குடிநீர் ரூ.10 முதல் ரூ.12 வரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், சிவகாசி ரோட்டில் மத்தியசேனை பாலம்  விரிவாக்கப்பணி கடந்த 15 நாட்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த பணியால் தண்ணீர் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பம்பிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ரோசல்பட்டி ஊராட்சியில் கடந்த 30 நாட்களாக தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, குடிநீரை விலை கொடுத்து வாங்கிய பொதுமக்கள், தற்போது பிற உபயோகத்திற்கான தண்ணீரையும் குடம் ரூ.6க்கு விலை கொடுத்து வாங்குகின்றனர். விருதுநகரில் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடக்கும் நிலையில், ரோசல்பட்டி ஊராட்சி மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். விருதுநகர் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக, தொடங்கப்பட்ட தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி கடந்த 8 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த திட்டம் மூலம் தண்ணீர் கிடைத்தால், 15 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படும் தண்ணீர் விநியோகத்தின் இடைவெளி 10 நாட்களுக்கு ஒருமுறையாக குறைய வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஊராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘மத்தியசேனை பாலம் விரிவாக்கப்பணியால் குடிநீர் குழாய்கள் உடைந்து விட்டன. இன்னும் இரண்டு நாட்களில் தண்ணீர் பம்பிங் செய்யும் பணி தொடங்கும். அதன்பின்னர் படிப்படியாக தண்ணீர் விநியோகம் சீரமைக்கப்படும்’ என்றார்.

Tags :
× RELATED கோழிக்கறி வாங்க சென்ற மாணவனுக்கு கத்திக்குத்து