×

மகனுக்கு எதிராக உள்ளடி வேலை யாருப்பா அந்த ‘ஸ்லீப்பர் செல்கள்’? கண்காணிக்க உத்தரவிட்ட ஓபிஎஸ்  ‘கவனித்து’ சரிக்கட்ட தீவிரம்

உத்தமபாளையம், ஏப்.3: தேனி தொகுதியில் தனது மகனுக்கு எதிராக உள்ளடி வேலையில் ஈடுபடும் கட்சியினரை கண்காணிப்பு வளையத்திற்குள் ஓபிஎஸ் கொண்டு வந்துள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் மகனை தோற்கடித்தே ஆகவேண்டும் என டிடிவி தினகரன் அணியினர் எதிர்ப்பு அரசியலில் தீவிரமாக இறங்கி வேலை செய்கின்றனர். ஓபிஎஸ் மகன் வேட்புமனு தாக்கல் செய்த போதே அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சில சொத்து விபரங்களை மறைத்துள்ளார் என ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். மேலும் இவரது பிரச்சாரத்தில் ஓபிஎஸ் குடும்ப சொத்துக்கள் பற்றிய விபரங்களை விலாவாரியாக வெளிப்படுத்தினார். இந்த விபரங்கள் அனைத்தும் எப்படி எதிர்முகாமிற்கு தெரிகிறது என்று ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்தது. இதனால் உடன் இருந்து கொண்டு எதிர் அணிக்கு தகவல் தரக்கூடிய ‘ஸ்லீப்பர் செல்கள்’ யார் என ரகசிய கண்காணிப்பில் அதிமுக.வின் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

மறுபுறம் தேனியில் தேர்தல் வேலைகள் செய்யாமல் படம் காட்டும் நிர்வாகிகள் பட்டியலையும் அதிமுக.வின் நிர்வாகிகள் சிலர் பட்டியல் எடுத்துள்ளனர். இவர்களை பற்றி ஓபிஎஸ் வசம் போட்டு கொடுப்பதும் அதிகரித்து வருகிறது. எனவே தனது மகனுக்கு எதிராக செயல்படுபவர்கள், உள்குத்து வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவிலேயே ஓபிஎஸ் சாட்டையை சுழற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் தேனிக்கு விரைவில் வரக்கூடிய டிடிவி தினகரன் 2 நாள் கேம்ப் போட்டு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது அதிமுக.வில் உள்ள தனது விசுவாசிகளை ரகசியமாக சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், ஓபிஎஸ் மகனை தோற்கடிக்க தேவையான புது யுக்திகளையும் டிடிவி சொல்வார் என அக்கட்சியின் நிர்வாகிகள் பேசிக்கொள்கின்றனர். இதனிடையே அதிருப்தியாக உள்ளவர்களை சரிக்கட்ட ஓபிஎஸ் தரப்பு பணத்தை அள்ளி வீச காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Observer ,
× RELATED கரந்தை நகர்ப்புற மருத்துவமனை...