×

நாட்றம்பள்ளி அருகே வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் தாசில்தார் சமரசம்

நாட்றம்பள்ளி, ஏப்.3: நாட்றம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வீட்டு மனை பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் தாசில்தார் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். காமராஜர் ஆட்சி காலத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த இடங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பல முறை மாவட்ட நிர்வாகம், திருப்பத்தூர் சப்-கலெக்டர், நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, இதுவரை எந்த அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நேற்று காலை 100க்கும் மேற்பட்டோர் லட்சுமிபுரம் கூட்ரோடில் திடீரென அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் உமாரம்யா, இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாசில்தார் உமாரம்யா தேர்தல் முடிந்தபின் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road ,housing patta ,Nathurampalli ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி