×

‘எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க’ குப்பைக்கு தொட்டியிலே தீ வைப்பு அம்பாத்துரையின் அவலமிது

செம்பட்டி, மார்ச் 29: அம்பாத்துரை ஊராட்சியில் குப்பைகளை உரக்கிடங்களுக்கு எடுத்து செல்லாமல் தொட்டியிலே தீ வைத்து எரிப்பதாக புகார் எழுந்துள்ளது. சின்னாளபட்டி அருகேயுள்ள அம்பாத்துரை ஊராட்சி திறந்தவெளி கழிப்பிடத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாத்துரையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் அம்பாத்துரை, நடுப்பட்டி, குரும்பப்பட்டி ஆகிய சாலைகளை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் அம்பாத்துரையிலிருந்து சின்னாளபட்டிக்கு வரும் சாலையின் இருபுறமும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பலருக்கும் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதுபோல ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை சேகரிக்க மாவட்ட ஊராட்சி முகமை மூலம் இருப்பு தொட்டிகளை வைத்துள்ளது. ஆனால் அதில் பொதுமக்கள் போடும் குப்பைகளை உரக்கிடங்களுக்கு எடுத்து செல்லாமல் அப்படியே தீ வைத்து எரித்ததால் இரும்பு தொட்டிகள் சேதமடைந்து விட்டன.

இதனால் தற்போது குப்பை தொட்டிகள் காட்சிப்பொருளாய் மட்டுமே உள்ளன. மேலும் குப்பைகளுக்கு தீ வைப்பால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாய் காட்சியளிப்பதுடன் பொதுமக்களுக்கு சுவாசம் சம்பந்தமான நோய்களும் ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர், திட்ட இயக்குனர் தகுந்த நடவடிக்கை எடுத்து அம்பாத்துறை ஊராட்சி திறந்தவெளி கழிப்பிடமாக மாறுவதை தடுப்பதுடன் குப்பைகளை முறையாக உரக்கிடங்குகளுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit ,
× RELATED ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா