×

ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை பகுதிகளில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் மறியல்: ‘உடனே நடவடிக்கை’ அதிகாரிகள் உறுதி

பள்ளிப்பட்டு, மார்ச் 29: ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்தூர், ஊத்துக்கோட்டை அடுத்த நம்பாக்கம் ஆகிய கிராமங்களில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த வீராணத்தூர் ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை தலைதூக்கி உள்ளது. இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம்  பலமுறை புகாரளித்தும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு வயல்வெளிகளில்  உள்ள பம்பு செட்டுகளுக்கு அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் சோளிங்கர்-ஐயனேரி சாலையில் திடீர் மறியலில ஈடுபட்டனர். தகவலறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘ஆர்.கே.பேட்டை ஒன்றிய நிர்வாகத்திடம் பேசி உடனே நடவடிக்கை எடுப்பதாக’’ உறுதி  கூறியதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே நம்பாக்கம் கிராம காலனியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக சரிவர குடிநீர் விநியோகம்  செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் கிராம மக்கள் கடந்த மாதம் பூண்டி பிடிஓ அலுவலகத்துக்கு சென்று முறையிட்டனர்.அப்போது அதிகாரிகள், ‘‘குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தனர். ஆனால் அதன் பிறகும் குடிநீர் பிரச்னையால் மக்கள் தவித்து  வந்தனர்.இதற்கிடையே குடிநீர் பிரச்னையை போக்க கடந்த வாரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தனர். ஆனால் தண்ணீர் வராததால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதனால்  நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டோர் நேற்று காலை 9 மணிக்கு கிராம சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் வந்து, அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து  மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Women ,areas ,Udukkottai ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது