×

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி திருப்போரூர் ரவுண்டானாவில் கண்காணிப்பு கேமரா

திருப்போரூர். மார்ச் 28: திருப்போரூரில் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் எதிரொலியாக திருப்போரூர் ரவுண்டானாவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள திருப்போரூர் வேகமாக வளர்ச்சிடைந்து வருகிறது. ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரிகள் ஆகியவை இருப்பதால் ஏராளமான வெளி நபர்கள் புதியதாக குடியேறி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னையை ஒட்டி இருப்பதால் பல பகுதிகளில் இருந்து சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, போலீசாரிடம் தப்பி இங்கு வருகின்றனர். இதனால், அமைதியாக இருந்த திருப்போரூர், கேளம்பாக்கம் பகுதிகள், தற்போது அமைதியை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், போதிய போலீஸ் பற்றாக்குறை ஏற்பட்டு குற்றச்செயல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, திருப்போரூர் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இருள் நிறைந்த இரவிலும் வாகன பதிவு எண்ணை கண்டுபிடிக்கும் வகையில் துல்லியமாக செயல்படும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை காவல் நிலையத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதால் குற்றச் செயல்கள் குறையும் என்றும், அவ்வாறு குற்றங்கள் நடக்கும்போது குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காண முடியும் எனவும் கருதப்படுகிறது. ஆனாலும் கந்தசுவாமி கோயில் நுழைவாயில், நெம்மேலி சாலை, மீன் மார்க்கெட், இள்ளலூர் சந்திப்பு, கிரிவலப்பாதை ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

Tags : election ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...