×

ஊத்துக்கோட்டை அருகே தாராட்சியில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை, மார்ச் 28: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் திறந்த வெளியில் சாய கழிவு நீர் வெளியேற்றும் சாயப்பட்டறையை மூடக்கோரி  மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தில்  துணிக்கு சாயம் போடும் சாயப்பட்டறை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பட்டறையில் இருந்து தினமும் சாயக்கழிவுகள் திறந்தவெளியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். விவசாய பயிர்களும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, தாராட்சி கிராம மக்கள் நேற்று முன்தினம் சாயப்பட்டறைக்கு சென்று ‘சாயக்கழிவுகளை திறந்தவெளியில்  வெளியேற்ற கூடாது என எச்சரித்து விட்டு வந்தனர். ஆனால், சாயக்கழிவுகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று திரண்டு வந்தனர். பின்னர்,  அவர்கள் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் தாராட்சி பஸ் நிறுத்தம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த ஊத்துக்கோட்டை ரோந்து எஸ்ஐ.பிரதாபன் மற்றும் தாராட்சி விஏஒ சுதாகர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதையடுத்து சாலை மறியலை கைவிட்டுவிட்டு சாயப்பட்டறையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அங்கு வந்த ஊத்துக்கோட்டை போலீசார், தற்போது கம்பெனியில் யாரும் இல்லை. இது குறித்து நீங்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுங்கள் எனக்கூறினர். இதை கேட்ட கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து ஊத்துக்கோட்டை தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் நேற்று சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tharatchi ,Udukkottai ,
× RELATED ஊத்துக்கோட்டை சுற்றுப்புறத்தில்...