×

ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

பெரம்பலூர், மார்ச் 27: லால்குடி தொகுதி புள்ளம்பாடி ஒன்றியத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியின் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார்.
 பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் லால்குடி சட்டமன்ற தொகுதியில், புள்ளம்பாடி ஒன்றியம் முதுவத்தூர் கிராமத்தில் உள்ள ஆணையடியான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பாரிவேந்தரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து மேலரசூர், மால்வாய், பெருவளப்பூர், சிறுகளப்பூர், ஊட்டத்தூர், பெரியகுருக்கைஅகரம், விரகாலூர், கோவண்டாக்குறிச்சி. புஞ்சைசங்கேந்தி. குமுளூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், லால்குடி மற்றும் புள்ளம்பாடி பகுதி மக்கள் எனக்கு புதிதானவர்கள் அல்ல. இந்த பகுதியில்தான் எனது முதாதையர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். எனது குலதெய்வமும் கல்லக்குடியை அடுத்த மால்வாய் கிராமத்தில்தான் உள்ளது. புள்ளம்பாடி பகுதி வறட்சியான பகுதி என்பதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கொண்டு வர பாடுபடுவேன். மேலும், என்னை வெற்றி பெற செய்தால் ஒவ்வொரு ஆண்டும் 300 மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இல்லா இலவச கல்வியும், ஆண்டுக்கு 300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்றார். வாக்கு சேகரிப்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன் மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : Barivanthar ,IGK ,
× RELATED உத்தமர்கோயிலில் மேம்பாலத்தின்கீழ்...